Thursday, October 15, 2015

ராஜாமிர்தம் ரமணப்பிரசாதம்‬


காவ்ய கண்ட கணபதி முனியின் சரிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று அத்தியாயங்களில் பகவான் ஸ்ரீரமண விஜயம் இருக்கிறது. நாயனா என்று அழைக்கப்படும் கணபதிக்கு “நான் யார்?” என்று உள்ளுக்குள்ளே பார்க்கும் சூக்ஷும வித்தைக் கற்றுக்கொடுத்து தபஸுக்கு அனுப்பினார் ப்ராம்மணசாமி.
அண்ணனின் கல்லூரிக்குக் கட்ட வேண்டிய ஐந்து ரூபாயில் தனக்கு வேண்டிய மூன்று ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு “மீதம் இரண்டு ரூபாய் இந்தத் தாளடியில் வைத்திருக்கிறேன்” என்று சீட்டு எழுதி வைத்துவிட்டு உடுத்திய துணியோடு மதுரையிலிருந்து அண்ணாமலை வந்திறங்கியவர் ஸ்ரீரமணர். கைகால்களை விரைத்துக்கொண்டு கட்டை போல் நீட்டித் தரையில் படுத்து “உயிர் பிரிந்தால் எனக்கு என்னாகும்? நான் யார்? ஏன் மரணத்திற்கு பயப்படுகிறோம்?” என்றெல்லாம் ஆத்மவிசாரங்களை அண்ட்ராயர் வயசிலேயே செய்தவர் அவர். துள்ளும் இளமையில் அதைப் பொசுக்கிப் புடம் போட்ட தபஸ்வியாக வாழ்ந்தார்.
”கோடிக் கோடி அடியவரில் நான் தான் கடைக்கோடி ஐயா.... 
அருணைமலை குரு ரமணா கருணை அருள் விழி வதனா... ”

கண்களில் நீர் கசிய கேட்டுக்கொண்டிருக்கிறேன். "மனது ஒன்று இருக்கிறதே.. எனது என்று தவிக்கிறதே... எனது மனம் அழிந்திடவே...” என்ற வரிகளில்.... ப்பா.... ராஜாவின் தேடல் தெரிகிறது. இளையராஜாவின் ரமணமாலை. இரண்டு நாட்களாக இரண்டாயிரம் தடவை அந்த பாடல்களை ஓடவிட்டு மனசை அதன் பின்னால் சுற்றவிடுகிறேன். சேப்பாயியைக் கிளப்பிய உடனே கை தானாக பாட்டுப் பொட்டியை உசுப்பி ஸ்ரீரமணர் பாடல்களைக் கேட்கச் சொல்கிறது மனசு. அண்ணாமலை ரமணாஸ்ரம பிரார்த்தனைக் கூடத்தில் உட்காருவது போல சேப்பாயியில் உட்கார்ந்து ரமணமாலைக் கேட்க மனசு அடித்துக்கொள்கிறது.
சமீபத்தில் இந்து மூர்த்தி திரு. கே. நடேசன் என்பார் 1989ல் கணபதி முனி பற்றியும் ரமணர் பற்றியும் பேசியதின் வீடியோ அனுப்பியிருந்தார். ஏற்கனவே கனன்று கொண்டிருந்தது அதில் பற்றிக்கொண்டு திகுதிகுவென எரிகிறது. எப்போ அணையுமோ?
There is never a moment when self is not; it is ever present, here and now. - Bhagavan Sri. Ramana Maharishi.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails