Thursday, October 15, 2015

திநகர் உலா

பரவலாக அஞ்சு ரூபாய் பத்து ரூபாய் ஐட்டங்களாக காட்டன் சாக்ஸ், நாப்கின்ஸ், கர்ச்சீப்ஸ், ஊதல், ரெண்டு ஆழாக்கு மல்லி, சாஃப்டி கோன் ஐஸ் என்று பாலத்துக்கடியில் சகலமும் கொட்டிக்கிடக்கிறது.

கண்ணைக் கவர்ந்த இன்னொரு வஸ்து ஜாக்கி ஜட்டி. யாரோ மலையாளி உற்பத்தியில் சந்தைக்கு வந்த Joocky ஜட்டியும் சில கடைகளில் டிஸ்ப்ளேயில் இருந்தது. அத்தனை கூட்டத்திலும் இடுப்பில் வைத்து அளவு பார்த்த அந்த வடக்கத்தியானை அதோடு ஓடவிடவேண்டும்.
நல்லி 100 திரும்பி போத்தீஸ் முன்னால் திரும்பும் கார்னரில் ஒரு பாய் கடையில் (2x2) தோடுடைய செவியர்களுக்காக பேரம் பேசாமல் வாங்கி மாட்டிக்கொள்ள தோதாக சகாய விலையில் தொங்கட்டான்கள், காதொட்டிகள் கிடைக்கிறது. விலாசம் வேண்டுவோர் அந்த முக்கில் நின்று அடியேனை அழைக்கவும். பொது சேவையில் ஈடுபடுத்திக்கொள்ள சித்தமாயிருக்கிறேன்.
சாயம் போன எதையெடுத்தாலும் 100 ரூ செருப்புக் கடைக்காரர் "ப்ரோடெக்சன்ல சில சமயம் இப்டி பால்ட் வரும். ஆனா நல்லா ஒளைக்கும் பார்த்துக்கிடுங்க.." என்று தூண்டில் போட்டார்.
ரங்கநாதன் தெருவில் நுழையும் பொழுதே விஸிட்டிங் கார்டை கையில் திணித்து "சுடி தக்கணுமா.." என்று காதைக் கடிக்கிறார்கள். "எனக்கா?" என்ற என்னை நக்கீரனை எரித்த சிவாஜி போல பார்த்தார்கள். நைசாக நழுவினேன்.
மூன்று பாவாடை 220 ரூ.க்கும் மூன்று புடவை 250 ரூ்க்கும் சீரழிகிறது. தினசரி சம்பளத்தில் வாழ்க்கை நகர்த்துபவர்களோடு சேர்ந்து தங்கமாய் இழைத்துப் போட்டிருந்த குண்டு பெண்மணியின் புடவைத் தீவிரம் வியக்க வைத்தது.
காய்கறிகள் கூறுகளில் கூவப்பட்டன. 2 கிலோ தக்காளி 30 ரூ. 2பிடி பச்சை மிளகாய் பத்து ரூபாய். விபூதிப்பட்டையில் கடையேறிய மாமாவிடம் "ணா.... வாங்கோ.. பத்து ரூவாண்ணா.. வாங்கிண்டு போங்கோ.." என்ற இளைஞன் என்னிடம் திரும்பி "வாத்யாரே... அள்ளிக்கோ.." என்று கண்ணடித்தான். "அவனா நீயியியியியி..." என்று வடிவேலார் வசனம் பேசினார்.
எழுத நிறைய இருந்தாலும் மொபைலில் பதிவதால் கட்டைவிரலிரண்டும் தேய்ந்து கடுகு விரலாகிவிட்டது.
LKS கோல்ட் ஹௌஸ் எதிரே மாடியில் தெரிந்த டைப் இன்ஸ்ட்டியூட் என்னை இன்னொரு மன்னார்குடி டேஸ் எழுத அழைக்கிறது. கொஞ்சம் பொருத்தருள்க.
படத்தில் மானஸாவும் நானும்..... மாலையில் திநகரில் குடும்பியாக உலாத்தியபோது... பிரியமான பெரியவள் வினயா க்ளிக்கியது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails