Saturday, February 22, 2014

கோவலன் கண்ணகி இளைப்பாறிய கோயில்

மருதநிலக்காரனான எனக்கு சோழ தேசத்துக்குச் செல்வதென்றால் மதகு மேலிருந்து சுழித்து ஓடும் ஆற்றுக்குள் தலைகுப்புறப் பாயும் சிறுவர்கள்(ட்ராயரோடுதான்!) போலக் கொள்ளைப் பிரியம். எனக்குள் இருக்கின்ற பக்கா கிராமத்தான் சடாரென்று முழித்துக்கொண்டு தையத்தக்காவென்று ஆனந்தக் கூத்தாடுவான். இப்படித்தான் ஒரு மூன்று நாள் முட்ட முட்ட இயற்கையின் இன்பத்தை நுகர்ந்தேன். வழியெங்கும் பச்சை வயல்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லாப் பங்குகளிலும் நட்டிருந்தார்கள். பச்சைப் பாவடைக்குப் பட்டு பார்டர் போல அறுக்கக் காத்திருக்கும் சில நெற்பயிர்கள் நிறைந்த பங்குகள். சுவாசத்தை நிரப்பி மயக்கும் மண் வாசம். மனசுக்கு ஊட்டி கொடைக்கானலிலெல்லாம் கிடைக்காத மட்டற்ற மகிழ்ச்சி.

சென்னையிலிருந்து ஆங்காங்கே வழிமறித்த டோல் கேட்டிற்கெல்லாம் இருநூற்று சொச்ச ரூபாய் கப்பம் கட்டி சேப்பாயி ஊருக்குள் ப்ரவேசிக்கும் போது மார்கழி மாதப் பனியில் புதுக்கோட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தது. நண்பர்கள் துணையோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலையோர ரூமில் லாரி பஸ் சத்தங்களுக்கிடையே ரோட்டோர பைரவரின் ”ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற எல்லை தாண்டும் விசாரிப்புகளோடு ஐந்து மணி நேரம் கட்டையைச் சாய்த்து ஓய்வு.

உஷத் காலத்தில் பக்கத்து கோவிலிலிருந்து தனுர் மாச ஸ்பீக்கர் ”விநாயகனே வினை தீர்ப்பவனே...” என்று செவி புகுந்து எழுப்பிப் பொன்னமராவதிக்குக் கிளப்பியது. “சுடு தண்ணி கிடையாதுங்க... பக்கத்துல ஓட்டலுக்கும் நாயித்துக்கிளம லீவு.. அதனால காலையில காப்பிதண்ணியும் கிடைக்காதுங்க...” என்று இரவு ரூமுக்குள் நுழைவதற்கு முன்பே பொருப்பாளக் கிழவர் எச்சரித்துவிட்டார். சொன்ன வாய்க்கு ஒரு கடலை பர்ஃபி பரிசாகக் கொடுத்தேன். சிகரெட் புகைசூழ போதாலோகமாகக் காட்சியளித்தப் பக்கத்துப் பெட்டிக்கடையில் இந்திய கிராமத்திற்குள் நுழைந்த அமெரிக்க அக்குவாஃபினா செறிநீரும் கேரி பேக்கில் சுருட்டியப் ஒன்பது வேர்க்கடலை பர்ஃபியும் (ஒன்று லாட்ஜ் கிழவருக்குக் கொடுத்தது போக மீதிம்) ராத்திரியைக் கடத்தியது.

குளிரே அஞ்சும் படியாகக் குளித்துவிட்டு பொன்னமராவதியை நோக்கி வண்டியை செலுத்தினேன். ஏசியை அனைத்துத் திறந்த கார் ஜன்னல் வழியாக உட்புகுந்த குளிர்காற்று இதமோ இதம். இருபுறமும் செழித்து வளர்ந்த புளியமரங்கள் நான் சமீபத்தில் கண்ட கனாவை ஞாபகப்படுத்தியது. வலதுகையால் கடுக்கண் இருக்கிறதா என்று காதைத் தொட்டுப் பார்த்துச் சிரித்துக்கொண்டேன். செம்மண் இல்லாத தார்ச்சாலை இது நனா என்றும் சொப்பனமில்லை என்றும் உறுதிப்படுத்தியது.

பூட்டியிருந்த பிரம்மாண்ட பங்களாக்களும், விடுமுறையில் சட்டமடித்த வாசல் கதவு சார்த்தியிருந்த மரங்கள் சூழ்ந்த வகுப்பறைகள் கொண்ட பள்ளிகளும் கொண்ட ”பட்டி... பட்டி...”யென்று முடியும் செட்டிநாட்டு ஊர்கள் வரிசையாகக் கடந்துசென்றன. சில பங்களா முகப்பில் நெற்றிக்குத் திலகம் போல பருவகாலங்களினால் பதம் பார்க்கப்பட்ட பார்வதி பரமேஸ்வரரின் வண்ணமிழந்த சுதைச் சிற்ப வேலைப்பாடுகளும் இருந்தன. தேசாந்திரியாகச் சுற்றிக் காசு பணம் நிலம் நீச்சு என்று கட்டி ஆண்டவர்கள் கையில் எதையும் கொண்டு போக முடியாமல் கரைசேர்ந்திருப்பார்கள்.

”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே...” என்று மருதவாணன் பட்டினத்தாராகிய திருவெண்காடருக்கு உபதேசித்த மந்திரம் ஸ்டியரிங் பிடித்த எனக்கு நினைவில் ஃப்ளாஷாக வந்து போனது. எதுவுமே சாஸ்வதமில்லாத நீர்க்குமிழி வாழ்க்கை என்று கி.மீட்டருக்கு கி.மீட்டர் சிதிலமடைந்த பழைய வீடுகளும் இடிபாடுகளுடன் நின்றிருந்த தூண் விழுந்த மண்டபங்களும் நியாபகப்படுத்திக்கொண்டேயிருந்தது. ஹாரனில்லாமல் வேகமாக வந்து திரும்பிய லாரி ஒன்று அதை நிஜமென்று நிரூபித்துச் சென்றது.

ஆலமர விழுதுகளுக்குக்கிடையே சேப்பாயியை நிழலில் நிறுத்தும் போது தனுர் மாத பூஜைக்காக பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் நடைதிறந்து திருப்பள்ளியெழுச்சிப் பாடிக்கொண்டிருந்தது. கிராமதேவதையின் வாசலில் ஐயப்பமார்கள் சந்தனம் மணக்க நின்றிருந்தார்கள். பரணிசிவம் குருக்களிடம் வழியெங்கும் பேசி அபிஷேகம் மஞ்சள் காப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். வாசலில் நின்றிருந்த காவல் தெய்வம் அருவா சாமியைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம்.

பொன்னன் - அமரன் என்ற இரு சிற்றசர்களால் உருவாக்கப்பட்ட சிற்றூர்தான் பொன்னமராவதியாம். நெடுவயல் ஜமீந்தார்களால் இக்கோயில் கட்டப்பட்டது என்று தகவல்களை அடுக்கிய சிவபாலன் மேலும் ஒரு கூடுதல் விஷயத்தைச் சொல்லி பொன்னமராவதிக் கோயிலின் புராதன மகத்துவத்தை எடுத்துரைத்தார். இரண்டாம் நூற்றாண்டில் புகார் நகரத்திலிருந்து கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளுடன் மதுரைக்குப் பயணப்படும் போது இக்கோயிலில் தங்கி இளைப்பாறியிருக்கிறார்களாம். சோழன் மற்றும் பாண்டிய மன்னர்களின் எல்லையிலிருந்து மீன் கொடியும் புலிக்கொடியையும் ஒருசேரப் பார்த்த குக்கிராமம் இது.

கருப்பர், சேவுகராயர், புர்ணா புஷ்பகலாம்பாள் சமேத ஐயனார், விநாயகர், வள்ளி தேவசேவனா சமேத சுப்ரமண்யர், பைரவர் என்ற பரிவார தெய்வங்களுக்கெல்லாம் அர்ச்சனை செய்த பின்னர் நாகரிடம் வந்தோம். கனாவில் வந்தது போலவே அழகான சன்னிதி. அவருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு அழகியநாச்சியம்மனுக்கு அபிஷேகமும் ஒன்பது கஜம் புடவையையும் சார்த்தச் சொல்லி அழகு பார்த்தோம். சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் தெத்தியோன்னமும் பிரசாதம். அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தத்துடன் அமிர்தமாக உள்ளே இறங்கியது.

கையில் தடியுடன் ஒரு வயதானவர் கோயிலுக்குள் பிரவேசித்ததும், பிரசாதம் சாப்பிட உட்கார்ந்த கற்றளி மண்டபத்தின் ஓரத்தில் கோவலனும் கண்ணகியும் இளைப்பாற உட்கார்ந்திருப்பது போன்ற பிரமை. சிவபாலன் சொன்ன கதையின் உடனடி எஃபெக்ட்.

மீண்டும் ஒருமுறை அம்மனை தரிசித்துவிட்டு கொடிமரத்தின் கீழ் நமஸ்கரித்துவிட்டு வெளியே வந்தோம். கனவு கண்டது போல பியெம்டபிள்யூவெல்லாம் நிற்கவில்லை. சேப்பாயி விட்ட கோலத்தில் அலுங்காமல் நின்றுகொண்டிருந்தாள். ”பிள்ளையார் பட்டி பக்கத்துலதான்..” என்று சொன்ன பரணிசிவத்திடம் “பாடல் பெற்ற ஸ்தலமொன்றும் பாதி வழியில் இருக்கே..” என்றேன். பரணிசிவம் சிரித்தது. பரமசிவம் அழைத்தது....

1 comments:

அப்பாதுரை said...

ஆஆ! இதென்ன ஒரே நாளில் இரண்டு பதிவா?

பொன்னமராவதி பெயர் காரணம் தெரிந்தது. இப்படி நினைத்த மாத்திரப் பயணம் போவது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. பச்சைப் பசேலா.. நிஜமாகவா?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails