Friday, August 19, 2016

யார் பேர்ல யாரு?

"மாமீ... சௌக்கியமா?"
"ம்.. இருக்கேன்டா அம்பீ.... நீ விசாலம் புள்ள பாஸ்கர்தானே"
"ஊஹும்.. இல்லே..."
"ஓ! உங்க தோப்பனார் பேரு பாஸ்கர் ...... சரியா?"
"இல்லியே...."
"ஒம் உடம்பொறந்தாம்... நன்னிலத்துக்காரன்... ஈர்க்குச்சி மாதிரி இருப்பானே... தொளதொளான்னு சோளக்கொல்லை பொம்மைக்கு சட்ட போட்டாமாதிரி... அவம் பேரோ?"
"அவம்பேரு ருத்ரமூர்த்தி....இப்ப வாட்டசாட்டமா இருக்கான்... "
"இவாளோட தாத்தாவுக்கோ.. பெரியப்பாவுக்கோ.. ஊர்ல மைனர் பாஸ்கர்னு பேருடீ.. " என்று சாப்பிட்டு அலம்பிய கையைத் துடைத்துக்கொண்டே இடையில் புகுந்த மாமா அந்த வயசான பாட்டியின் கையைக் கெட்டியாகப் பிடித்தார். கோல்ட் ஃப்ரேம் கண்ணாடியிலும் கையில் இருந்த ஐபேடிலும் அணிந்திருந்த குர்தாவின் ஜிலுஜிலுப்பிற்கும் அவரது பசங்கள் ந்யூ ஜெர்ஸியிலோ கலிஃபோர்னியாவிலோ டாலரில் சம்பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாகத் தெரிந்தன.
பாஸ்கர் என்று அந்த மண்டபத்தின் ஐநூறு பேருக்கு இலைபோடும் சாப்பாட்டு அறையில் மேற்கூறிய ஜோடியால் ரேக் செய்யப்படும் நபர் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தார். மோர்க்குழம்பு என்றால் உசிர் என்பது அவரது கண்களில் பளிச்சிட்டது. கேசத்துக்கு தாராளமாகக் கறுப்படித்து நாற்பதாகக் காண்பிக்க பழியாய்ப் போராடியிருப்பது புரிந்தது. இன்னமும் தனது பெயரைச் சொல்லாமல் நமுட்டுச் சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
"சொல்லேண்டா.... நீ யாரு?" என்று சிரிப்பும் கடுப்பும் கலந்து கேட்டார். மயில்கண் வேஷ்டியின் நுனியை இழுத்துக் கையில் பிடித்துக்கொண்டார். சாப்பிட்ட பிறகு தாம்பூலம் போட்டுக்கொள்ள எடுத்த இரண்டு வெற்றிலையின் நரம்புகளைக் கிழிப்பதில் எதிராளியின் நரம்பை கிழிப்பதாக உருவகப்படுத்திக்கொள்வது அவரது செய்கையில் புலப்பட்டது.
"கண்டுபிடியுங்கோ.. பார்க்கலாம்.." என்று தோள்களைக் குலுக்கிக் கண்ணைச் சிமிட்டி உடம்பெல்லாம் ஆடிச் சிரித்து அந்த மாமாவின் கையை ஷேக் ஹாண்ட் கொடுப்பது போல இறுகப் பிடித்துக்கொண்டார்.
"ஹேமா மாமீ.. எப்டியிருக்கேள்?" என்றொரு க்ரீச் குரல் அவர்களிடையே புகுந்தது. இங்கு சாதாரணமாக எழுதியிருந்தாலும் "மாமீ"யிலும் "எப்டியிருக்கே"ளிலும் இரண்டு செகன்ட் அழுத்தி அந்த "பாஸ்கரா?" என்று வினவிய மாமியிடம் கேட்டவள் அந்த பாஸ்கரனாகக் கேட்கப்பட்டவரின் மனைவி போலும். இதெப்படி உனக்குத் தெரியும்? என்று நெஞ்சு நிமிர்த்திக் கேள்வியெழுப்ப வேண்டாம்.
அந்தம்மாள் அங்கு வந்ததும் சிரிப்பை மறைத்துக்கொண்டு இராணுவ வீரன் போல விறைப்பாக நின்றுகொண்டார். நொடிக்கொருதரம் அச்சத்துடன் அந்தம்மாளை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு மாமாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு நவரசம் காட்டும் சிவாஜி முகம். இது கட்டுப்பட்ட கணவனின் ஆயிரம் லக்ஷணங்களில் ஒன்று. மீதம் 999 தவணை முறையில் வெளியிடப்படும்.
அந்த இரண்டு பெண்மணிகளும் அட்டிகை, பட்டுப்புடவை, "ஓ..ஷங்கர் எல்லேலயா இருக்கான்.. அச்சச்சோ.. போன வெகேஷனுக்குப் போயிருந்தேனே..." என்று பாட்டியும்.... "அடுத்த மாசம் போறேன்... பருப்புப்பொடி குடுங்கோ.. கொண்டு போய் கொடுக்கறேன்.. ரெண்டா தாங்கோ.. எங்களுக்கு ஒரு பாக்கெட்.." என்றும்.. "ஓ.. கூலி கேட்கிறோயிடீ" என்றும் சிரித்தும்... கைத்தட்டியும்.... லோகாதய விஷயங்கள் அனைத்தையும் பேசிக்கொண்டிருக்க இந்த இருவரும்நேருக்கு நேர் நின்று கொண்டு அசடுவழிய பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
"இது என்னடா பேக்காட்டாம் பேரைச் சொல்லாம.. கெக்கேபிக்கேன்னு சிரிச்சுண்டு...." என்று அடுத்த கட்ட விசாரணைக்குத் தாவினார் மாமா.
"ஹெஹ்ஹே.. பாலாஜி எப்படியிருக்கான்..." என்று அந்த பாஸ்கரனாகப் பாவிக்கப்பட்டவர் கேட்டார்.
"யார்ரா அது?"
"என்ன ஓய்! உம்மளோட பெரியவன்..."
"அட அசடே! பெரியவன் சீனுடா..."
"ஓ.. அப்ப பாலாஜி சின்னவனோ? என்னோட க்ளாஸ் மேட்... "
"அடப்பாவி... எனக்கு சின்னது பொண்ணுடா... ரேகா.. வித்யா மந்திர்... மறந்துட்டியா?"
பாஸ்கரனாகப் பார்க்கப்பட்டவர் காலைக் குனிந்துப் பார்த்தார். உத்தரம் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் மேலேயும் உடனே பார்த்தார்.எதிரிலிருக்கும் மாமாவைப் பார்க்க மனம் வரவில்லை. ஜாங்கிரியைக் கடித்துக் கையில் தூக்கிக்கொண்டு இருவருக்கும் இடையில் ஓடிய புஷ்டியான வாண்டு ஒன்று நிமிர்ந்து "சிவா மாமா.. இது உங்களுக்குக் கிடையாதே..." என்று கையை கொடுக்குக் காண்பித்து பழித்துவிட்டு ஓடினான்.
"நீ சிவாவா? பாஸ்கரனில்லையா?"
"எங்காத்துல யாருக்கும் பாஸ்கரனில்லை ஓய்!"
"உங்க தா..." என்று முடிப்பதற்குள் வெட்டி...
"தாத்தா.. பாட்டி... பேத்தி..எள்ளுப் பேரன்.. யாருக்கும் பாஸ்கரன் கிடையாது..."
"சிவாவா? எந்தூர் சிவா?"
"கும்மோணம்... சக்கரப்படித்துறை... நீர் சங்கரன் மாமாதானே?"
"போடா பேக்கு... நான் சதாசிவம்... போழக்குடி..."
"அச்சச்சோ சாரி மாமா.. நான் தஞ்சாவூர் சங்கரன் மாமான்னு பேசிண்டிருக்கேன்.."
சிரமப்பட்டு அவன் தோளுக்கு மேலே பின்னாலே பார்த்தார்.
"கல்பூ.. கேட்டியோன்னோ.. இந்த அசடு பேசறத?"
அந்தப் பேச்சை அப்படியே வெட்டிவிட்டு "என்னண்னா?" என்றாள் கல்பூ மாமி.
"இவன் பாஸ்கரில்லே... யாரோ சிவக்குமாராம்... இத்தன்னாழி கதறக் கதற ரம்பம் போட்டுடுத்து... டைம் வேஸ்ட்.. சீனு ஃபேஸ்டைம்ல கூப்பிடுவான்.. வைஃபை வேணும்... ஆத்துக்குப் போலாம்..."
"வரேண்டியம்மா கொழந்தே..." என்று சொல்லிக்கொண்டு நகர்ந்தாள் அந்த மாமி.
"நீங்க ஹேமா மாமியில்லையா?"
"கல்பகம்டீ... அப்பாஸாமி அபார்ட்மென்ட்ஸ்... தேர்ட் ஃப்ளோர்... "
அந்த பாஸ்கரனாக அறியப்பட்ட ஆசாமியிடம் இந்தம்மா குடுகுடுன்னு போயி...
"நீங்க?" என்று சொன்னதும்தான் தாமசம்...
"ஏழேழு ஜென்மத்துக்கும் எங்க குடும்பத்துல யாருமே பாஸ்கர் கிடையாது... இனிமேலும் அந்தப்பேர் வைக்கமாட்டேன்.. போறுமா?" என்று கையிரண்டையும் அறைந்து தலைக்கு மேலே கூப்பி... சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
தலையைத் தூக்கியபோது எதிரில் யாரையும் காணோம்.
அப்ப " நீங்க"ன்னு கடைசியாக் கேட்டது அவரோட வைஃப் இல்லையா? என்று இவையெல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கோயிந்துவின் மனைவி கேட்க... அவன் பேஸ்தடித்தது போலப் பார்த்தான்.
"சொல்லுங்கோ" என்ற அவளின் அதிகார உலுக்கலுக்கு "அம்மா பரதேவதே.... நான் கோயிந்து இல்லே... கோயிந்து இல்லே.,. கோயிந்து இல்லே.." என்று பூர்ணம் விஸ்வனாதனாய் புலம்ப ஆரம்பித்தான்.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குழப்பம்... ரசித்தேன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails