Friday, August 19, 2016

நாகஸ்வர ஓசையிலே...

அப்போதுதான் இருள் கவிந்த முன்னிரவு நேரம். வழிநெடுக ஊசித் தூறல் போட்டுக்கொண்டே இருந்தது. ஈர வாசனை. அங்கே வந்தவுடன் காதுக்கு சுகமான நாகஸ்வர ஓசை. வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினோம். நங்கை உத்தர குருவாயூரப்பன். குட்டியூண்டு மூர்த்தம். பிரம்மோத்ஸ்வம் நடந்துகொண்டிருக்கிறது. அன்னபக்ஷி வாகனத்தில் வீணாபாணியான வாணி சரஸ்வதி அலங்காரத்தில் உற்சவர் சேவை சாதித்துக்கொண்டிருந்தார். புறப்பாடுக்கு வாசலில் வண்டி தயாராகிக்கொண்டிருக்கிறது.
தீவட்டி ஏற்றிக்கொண்டு அன்னபக்ஷியருகில் தூக்கிக்காண்பித்த மகானுபாவர் பகவத் கைங்கர்யத்தில் தன்னை மறந்திருந்தார். ஸ்வாமி தரிசனத்தின் போதும் காதுகள் நாகஸ்வரத்தையே பற்றிக்கொண்டிருந்தது. அந்த மங்கல இசையோடு ஸ்வாமி தர்சனம் செய்வது பெரும்பேறு. அதுவும் ஸ்ருதிலயம் பிசகாமல் வாசிக்கும் போது மனசுக்குள் சட்டென்று ஒரு பூ மலர்கிறது. இசைவாசம் அப்படியே கட்டிப்போட்டுக் கண்களை சொருகிக்கொள்ளச் செய்கிறது. விழிகள் மூட... லாஹிரியால் மயங்கச்செய்து... கால்கள் லேசாகத் தாளம் போடுகிறது... கொஞ்சம் கொஞ்சமாக மெழுகாய் உள்ளம் உருகுகிறது.
வெளியே மழை விட்டபாடில்லை. “எந்தரோ மஹானுபாவு” இரட்டை நாகஸ்வரம் கம்பீரமாக எடுத்த போது வருணபகவானுக்கும் இசை கேட்கும் ஆசை வந்து நாகஸ்வரத்துக்கு ஒத்து வாசிப்பதுபோல சீராக வர்ஷிக்க ஆரம்பித்தார். தெரிந்த கீர்த்தனைகளை தேர்ந்த வாத்திய இசையாக கேட்கும்போது மனது வரிகளைப் பிடித்து தன்னால் இழுத்து வருகிறது. புதிதாக வார் பிடித்த தவில். தூக்கிப்பிடித்த நாதஸ்வரத்துக்கு பிரமாதமான துணை. காது அடைத்துப்போனவர்களுக்கு தவிலோசை அருமருந்து. கோயில்களில் மல்லாரி கேட்டுக்கொண்டு பிரகார உலாவோ வீதியுலாவோ வருவது ஜீவனோடு திருக்கயிலையிலோ ஸ்ரீவைகுண்டத்திலேயோ எம்பெருமானோடு பேசிக்கொண்டே வாக்கிங் போவதற்கு ஒப்பாகும்.
அக்கம்பக்கம் ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டிருந்தவர்களின் கவனத்தைக் கவரும் செவியீர்ப்பு வீசை. எந்தரோவின் ஸ்வரப் பிரஸ்தாபங்களை நாகம் படமெடுத்து ஆடுவது போல நாகஸ்வரத்தை சுழற்றி வாசித்தார்கள். கண்கொள்ளாக் காட்சி. கச்சேரியை நேரடியாக ரசிப்பது நம்மைக் கூண்டோடு ஸ்வர்க்க லோகம் தூக்கிப்போகும் அனுபவம். அதுவும் வாசிப்பவர்கள் இசையோடு இரண்டறக் கலந்து அதில் மூழ்கி கண்கள் மூடி லயித்துப்போவது நம்மை அந்த இடத்தை விட்டு காலை நகர்த்தமுடியாமல் கட்டிப்போட்டுவிடுகிறது.
வெளியே மழை நின்றுவிட்டது. நாகஸ்வரமும் தவிலும் சேர்ந்து இசைப் பிரவாகமாக ஓடியது. ”எந்தரோ மஹானுபாவுலு” தீர்க்கமாக வாசித்து முடித்தவுடன் “அந்தரிகி வந்தனமுலு” என்று கைகூப்பி வணக்கம் சொல்லி கண்களால் நமஸ்கரித்து வீடு திரும்பினேன்.
ஒரு வாரத்திற்கு உயிர் சார்ஜ் ஏற்றிக்கொண்ட ஞாயிறு மாலை!

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

சுகானுபவம்..... உங்களுக்கு நாகஸ்வரம்.... எங்களுக்கு உங்கள் எழுத்து!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails