Friday, August 19, 2016

ம்... ஏறுங்க...

ர.நி.யிலிருந்து பே.நிக்கு பஸ் வரும் என்று அரை மணி கால்கடுக்க ஆலந்தூரில் நின்றிருந்தேன். தாம்பரத்துக்கும் திருச்சிக்கும் ஐம்பது பஸ்கள் ஐந்தைந்து பயணிகளுடன் காற்று வாங்கிக்கொண்டு சென்றது. “சேலம்.. ஆத்தூர்.. கோயம்புத்தூர்...” பத்து வண்டியிலிருந்து இறங்கிக் கூவி ஆள் பிடித்தார்கள். “அண்ணே... ஏறுண்ணே....ஏசிண்ணே.. ” என்று மதுரைக்கார பாசத்தம்பி பஸ்ஸிலிருந்து கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட்டார். திருச்சி செல்லும் அரசுப்பேருந்து ஓட்டுனர் முழுஞாநி போல உட்கார்ந்திருந்தார்.
எங்கள் ஏரியா செல்லும் பஸ் ஒன்று மூச்சுத் திணறி வந்து நின்றது. பஸ்ஸினுள் ஏற்கனவே நூறு பேர் ஐம்பது சதவிகிதம் சுவாசித்துக்கொண்டிருந்தார்கள். புளிமூட்டை போல இன்னும் இருபது பேர் தங்களை விரும்பித் திணித்துக்கொண்டார்கள். நானும் ஏறி யாருடைய இழப்புக்கும் தயாராயில்லை. தங்கிவிட்டேன். சாரை சாரையாய் வெளியூர் செல்லும் ஸ்லீப்பர் கோச்சுகள் வந்தன. தென்தமிழக மக்கள் ஏக்கத்துடன் தங்களது ஊர் பேருந்துக்காக தேமேன்னு காத்திருந்தனர். “மாயவரம்.. கும்பகோணம்.. மன்னார்குடி.. பட்டுக்கோட்டை...” என்று ராகமாகக் குரல் வந்த பஸ்ஸிலிருந்தவர் எங்கேயோ பார்த்த முகத்தவர்.
இன்னும் எத்தனை நாழி நிற்கவேண்டுமோ என்று தவித்துக்கொண்டிருக்கும் போது இருட்டில் ரகஸியமாகப் பிரியமானவளைத் தேடுவது போல என்னை ஒட்டி ஒரு ஆட்டோ வந்தது.
“எங்க போகணும்?”
ஆட்டோவழியா... பஸ்வழியா என்று சிவாஜி ரஜினி போல பூவாதலையா போட கை சட்டைப் பாக்கெட்டுக்குள் சென்றாலும், காலின் வலி நிர்பந்தத்தினால், வாய் முந்திக்கொண்டு வீட்டு முகவரியைச் சொன்னது.
“நூத்தி இருவது”
“வேணாம்...”
“நீங்க கேளுங்க...”
“நா கேட்டாக்க கோச்சுப்பீங்க.. போடாங்..னு நாக்கை மடிச்சுக்கிட்டு... அடிக்க வருவீங்க.... வுட்ருங்க”.
உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று அறுத்துவிட்டு வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தேன். ப்ளாட்ஃபார்ம் ஓரத்தில் மஞ்சள் சரடு பளிச்சென்று இருந்த மாதுவிடம் கையைக் கோர்த்து அந்த உஷ்ணத்திலும் ஹாட்டாக பேசிக்கொண்டிருந்த இளம் மாப்புவைப் பார்த்துக்கொண்டிருந்த போது முதுகுக்குப் பின்னால்....
“பரவாயில்லை... கேளுங்க..”. ஆட்டோ நகராமல் அங்கேயே நின்றிருந்தது.
“எழுவத்தஞ்சு”. சிரிக்காமல் தோரணையில் கொஞ்சம் கண்டிப்பு ஏற்றிக் கேட்டேன்.
“இங்கேயிருந்து உங்க வீடு எவ்ளோ தூரமிருக்கும்?”
“எதுக்கு?”
“ச்சும்மா.. சொல்லுங்களேன்..” சிரித்தார்.
”ஆறு...ஏழு..”
“கிலோ மீட்டருக்கு பன்னெண்டு ரூவா... இப்ப சொல்லுங்க எவ்ளோ வரும்?”
“கணக்குப் பண்ணிப் பார்த்தாக் கூட நீங்க கேட்டது வராது”
“சரி... நூறு ரூவாய் தாங்க.. ஏறுங்க..”
பேரம் நடந்துகொண்டிருக்கும் போது ஒரு பஸ் புயலென நிறுத்தத்துக்கு வந்தது. பேரத்தை கைவிட்டு பஸ்ஸைப் பார்க்க ஓட எத்தனித்தேன்.
“இதெல்லாம் தாம்பரம்தான்.... பத்தே காலுக்குதான் அடுத்த பஸ்ஸு.... அதுவும் ஃபுல்லாத்தான் வரும்... அப்புறம் ஆட்டோ கேட்டீங்கன்ன நூத்தம்பதுக்கு குறைஞ்சு ஒரு பய வரமாட்டான்...”
கொக்கியில் மாட்டினேன். என்ன செய்யலாம் என்று தத்தளித்து யோசிக்கும் வேளையில் ஆட்டோகாரர் “ம்.. ஏறுங்க...” என்று உரிமையாகக் கூப்பிட்டார்.
மோடி மஸ்தான் வித்தையில் “வா இங்கே... வந்தேன்....” சொல்வது போல அவரது பேச்சுக்கு கட்டுண்டு ஏறிவிட்டேன்.
“உங்களுக்கு இந்த அட்ரெஸ் தெரியுமா?”
“தெரியும் சார் வாங்க...”
வண்டியை விரட்டி ஓட்டினார். டர்ர்ர்ர்ரென்று காதைக் கிழிக்க அலறியது ஆட்டோ. இருவரும் உம்மென்று சில நிமிடங்கள் வந்தோம். நான் மௌனத்தைக் கலைத்தேன்.
“மினி பஸ்ஸெல்லாம் வந்துட்டுதே.. உங்களுக்கு குடும்பம் நடத்தற அளவுக்கு சவாரி வருதா?”
“ரொம்ப வருசமா எதையெடுத்தாலும் ஆட்டோலாம் அளிஞ்டும்னு பேசிக்கிறாங்க.. அளிஞ்சிருச்சா? இல்லையே... எங்களுக்கு எப்பவும் போல சவாரி உண்டு சார்...”
இன்னும் ஆட்டோவின் காதைத் திருக அதிகப்படினான சப்தத்துடன் தெருக்களில் விரைந்தது ஆட்டோ.
“இப்போ வீட்டுக்கு போயிட்டிருக்கீங்களா?”
“எப்படி சார்? ஒம்பதே முக்காதானே ஆவுது.. இன்னும் பன்னெண்டு மணி வரை ஓட்டுவேன்.. “
“காலேல எவ்ளோ மணிக்கு சவாரிக்கு ஆரம்பிப்பீங்க?”
“ஏளு மணிக்கு ஸ்கூல் பிள்ளைங்க... அப்புறம் எட்டரை மணிக்கு ஆஃபீஸ் சவாரி ஒண்ணு இருக்கு.. பகல்ல ஒரு மணி வரை ஓட்டுவேன். பின்ன நாலு மணி வரைக்கும் தூங்குவேன்.. அப்புறம்.. ரோட்டுலதான்...”
“பசங்க...”
“பெரியவன் இஞ்சினியரிங் படிக்கிறான். சின்னவன் ட்வெல்த். ஒளுங்கா படிங்கடான்னு தெனமும் சொல்லிட்டு நானு ரோட்டுக்கு வந்துடுவேன். வூட்ல அவதான் கிடந்து அடிச்சிக்கிறா...”
“நல்லா படிக்கறாங்களா?”
“ம்... ஏதோ படிக்கறானுவ... இன்னும் நல்லா படிக்கணும்னு தெனமும் அவனுங்க கிட்டே பேசறேன்”
ஆட்டோகாரரின் தீவிரம் அவரது திடமான பேச்சில் தெரிந்தது.
“சின்னவன் சுட்டி சார்.. பெரியவன் கொஞ்சம் வெளையாட்டா இருக்கான். ராத்திரி சோறு தின்னும்போது எம் பொண்டாட்டிதான் படிங்கடா.. நல்லா படிங்கடான்னு அடிச்சுக்கிறா...”
கடந்து போன டாஸ்மாக் தாண்டி ஒருவர் சுவற்றில் முட்டுக்கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்.
“ஹையோ... சனியன் புடிச்சதுங்க.. வூட்ல பொண்டாட்டி பசங்க பேசனுமின்னு சாப்பிடாம காத்துக்கினு இருக்கும். இது இங்க சொவத்துக்கிட்டே பேசிக்கிட்டிருக்குப் பாருங்க....”
”நீங்க எதுவும்...”
“ஐயய்யே.... அப்புறம் குடும்பம் எப்படி சார் முன்னுக்கு வரும்?”
வீடு நெருங்கிவிட்டது. இறங்கினேன்.
“வேணாம் சார்.. இந்தாங்க... பிடிங்க...”
“இல்ல பரவாயில்ல... வாங்கிக்கோங்க...”
“ஊஹும்.. நாம பேசினது போதும்.....”
என் கையில் இருபது ரூபாய் தங்கியிருக்க.. நூறை வாங்கிக்கொண்டு பறந்தார். அதிகம்தான் என்றாலும் இருபதை வலுக்கட்டாயமாக அவர் பாக்கெட்டில் சொருகியிருக்கலாமோ என்று இன்னமும் என் மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு அனுபவம்.....

குடும்பம் முன்னேற பாடுபடும் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு வாழ்த்துகள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails